நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்படுவதை கட்டாயமாக்கி மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை அண்மையில் வெளியிட்டது.
இந்த சூழலில், வந்தே மாதரம் பாடலை வேண்டுமென்றே அவமதிப்போர் அல்லது இடையூறு ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தேசிய கௌரவத்தை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்படும் இந்த மசோதா, நிறைவேற்றப்பட்டால் ‘வந்தே மாதரம்’ பாடலை தடுக்க முயற்சிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழிவகுக்கும். இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற பிறகே சட்டமாக அமலுக்கு வரும்.
இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில், தமிழகத்தில் நடைபெற்ற பல முக்கிய அரசு நிகழ்ச்சிகளிலும் ‘வந்தே மாதரம்’ பாடல் ஒலிக்கப்பட்டது. முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் பதவியேற்பு விழா மற்றும் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்திலும் நிறைவிலும் இந்தப் பாடல் இசைக்கப்பட்டது.
