பீகார் மாநிலத்தின் நவாடா மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி, அங்குள்ள CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.
பண்டி அஸ்கர் மாலிக் என்ற அந்த கைதி பீகார் மாநிலத்தின் தமௌல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர். திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவரை சிகிச்சைக்காக நவாடா சதர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்திருந்தனர்.
நேற்று மாலை சுமார் 4.50 மணியளவில், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை பயன்படுத்திக் கொண்ட கைதி, போலீசாரின் கண்காணிப்பிலிருந்து வேகமாக தப்பி ஓடியுள்ளார். போலீசாரால் அவரை உடனடியாக பிடிக்க முடியாமல் போனதால், கைதி அங்கிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பி ஓடிய கைதியை மீண்டும் பிடிப்பதற்காக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது போன்ற சம்பவம் முதல் முறை அல்ல. கடந்த காலங்களிலும் இதே போல சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட சில கைதிகள் பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிச் சென்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
