புற்று நோய் அபாயம் : தமிழ்நாட்டில் கலர் அப்பளத்தை விற்பனை செய்ய தடை

தமிழ்நாட்டில் செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது. பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தடையை மீறி கலர் அப்பளங்களை தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சந்தைகள், சுற்றுலா தளங்கள் மற்றும் பொருட்காட்சிகளில் விற்பனை செய்யப்பட்டு வந்த பல்வேறு கலர் அப்பளங்கள் மற்றும் வத்தல் மாதிரிகள் உணவு பாதுகாப்புத்துறையால் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அந்த பரிசோதனைகளில், பல மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில மாதிரிகளில் உணவுப் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படாத தொழிற்சாலை சாயங்களும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடிக்கடி கலர் அப்பளம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமாக குழந்தைகள் இந்த கலர் அப்பளத்தை சாப்பிட்டால் அலர்ஜி மற்றும் கவன சிதறல் உண்டாகலாம் என கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி கலர் அப்பளங்களை தயாரிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ முயற்சித்தால், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.

உளுந்து, அரிசி உள்ளிட்ட இயற்கை மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் பாரம்பரிய அப்பளங்களை பயன்படுத்துவது உடல்நலத்திற்கு பாதுகாப்பானது என்று உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Related Post

Latest News