சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு…பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த விசாரணைக் கைதி சபரிவர்மன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, சிறைத்துறையைச் சேர்ந்த 3 வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயதான மாற்றுத்திறனாளி சபரிவர்மன், தனது வீட்டில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி தென் தாமரைக்குளம் போலீசார் கைது செய்தனர். பின்னர், கடந்த ஜூலை 9-ஆம் தேதி அவர் நாகர்கோவில் கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

சிறையில் இருந்த சபரிவர்மன் கடந்த ஜூலை 13-ஆம் தேதி திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், சபரிவர்மன் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டினர்.

இதையடுத்து சபரிவர்மனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நாகர்கோவில் கிளைச் சிறையின் தலைமை வார்டன் ஜெகன் மற்றும் வார்டன்கள் சிவகுமார், திருவிடைநம்பி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Post

Latest News