திருவள்ளூரில் பெண்ணைக் கொன்று நகை கொள்ளை : குற்றவாளி அதிர்ச்சி வாக்குமூலம்

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காட்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வனஜா (55), வீட்டிலிருந்தபடியே இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். சம்பவம் நடந்த நாளில் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த ராதாகிருஷ்ணன், வீட்டின் கதவு மூடியிருந்ததை கவனித்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் வனஜாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்ற நபரை கைது செய்தனர். புதிய வீடு கட்டி வந்த நிலையில் கடுமையான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டதால்,, நகைகளை கொள்ளையடிக்கும் நோக்கில் திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாக போலீசார் கூறினர்.

இதையடுத்து அப்துல் ரகுமான் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 12.5 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Post

Latest News