சென்னை அருகே பூந்தமல்லி பகுதியில் பதுங்கியிருந்த பிரபல ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அவரை, ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான சுதாகர் மீது 3 கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வழக்குகளில் ஜாமீன் பெற்று வெளியே வந்திருந்த அவர், அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவையடுத்து, போலீசார் சுதாகரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், அவர் பூந்தமல்லி அருகேயுள்ள பாரிவாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சுதாகர், பிரபல ரவுடியும் ஆயுள் தண்டனை கைதியுமான அரும்பாக்கம் ராதாவின் நெருங்கிய கூட்டாளி என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
