பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை; 15 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள பழவேற்காட்டில், வீட்டில் தனியாக இருந்த 55 வயது பெண் கொலை செய்யப்பட்டு, அவர் அணிந்திருந்த சுமார் 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்னேரி அருகே உள்ள பழவேற்காட்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி வனஜா (55), வீட்டிலிருந்தபடியே இட்லி மாவு விற்பனை செய்து வந்தார். சம்பவம் நடந்த நாளில் மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்த ராதாகிருஷ்ணன், வீட்டின் கதவு மூடியிருந்ததை கவனித்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வனஜா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் வனஜாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய தனிப்படை அமைத்துள்ளனர்.

பட்டப்பகலில் குடியிருப்பு பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவேற்காடு மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News