நாகையில் கலப்பட டீசல் கள்ளச்சந்தை : 9,000 லிட்டர் பறிமுதல் : 4 பேர் கைது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கலப்பட டீசலை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாகக் கூறப்படும் நான்கு பேரை குடிமைப் பொருள் வளங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது சுமார் 9,000 லிட்டர் கலப்பட டீசல் மற்றும் இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகளுக்காக கொண்டு வரப்படும் கலப்பட டீசல், பின்னர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக குடிமைப் பொருள் வளங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலாடுதுறை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுதர்லால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, நாகை அருகேயுள்ள அக்கரைப்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான வாகனங்களில் சோதனை

கண்காணிப்பின்போது கடற்கரை சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த கேரள மாநில பதிவெண் கொண்ட டேங்கர் லாரி மற்றும் மற்றொரு சரக்கு வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.

விசாரணையில், டேங்கர் லாரியில் இருந்த கலப்பட டீசல் மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டு வந்தது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இரு வாகனங்களும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

9,000 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்

சோதனையின் போது சுமார் 9,000 லிட்டர் கலப்பட டீசல் கைப்பற்றப்பட்டது. இதனுடன் சம்பந்தப்பட்ட டேங்கர் லாரி மற்றும் சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சட்டவிரோத விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Post

Latest News