வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே எல்.ஜி.புதூர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த மூன்று பேரை விருதம்பட்டு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் நேற்று காலை சுமார் 11 மணியளவில் எல்.ஜி.புதூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள கலத்துமேடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மூவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 1.150 கிலோ கஞ்சா மற்றும் 30 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர், அவர்களை விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், காட்பாடி எல்.ஜி.புதூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரமேஷின் மகன் விக்னேஷ் (21), ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ரவியின் மகன் ராஜேஷ் (29), மற்றும் மாந்தாங்கல் சிலோன் காலனியைச் சேர்ந்த தம்பிதுரையின் மகன் சக்தி (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.
கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக அவர்கள் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
