தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான குரலாகத் திகழ்ந்த சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இளையரசனேந்தல் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிக் கல்வியை இளையரசனேந்தலில் முடித்த அவர், விருதுநகரில் இயற்பியல் இளநிலைப் பட்டப்படிப்பை பயின்றார்.
1966ஆம் ஆண்டு முதல் இலக்கிய உலகில் தனது பயணத்தைத் தொடங்கிய அவர், கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து படைப்புகளை வழங்கினார். பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் மிக முக்கியமான படைப்பாக ‘அஞ்ஞாடி’ நாவல் கருதப்படுகிறது. இந்த நாவலுக்காக அவர் 2014ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார்.
பூமணியின் முதல் நாவலான ‘பிறகு’ 1979ஆம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர் ‘வெக்கை’, ‘நைவேத்தியம்’, ‘வரப்புகள்’, ‘வாய்க்கால்’ உள்ளிட்ட பல நாவல்கள் வெளிவந்தன. அவர் எழுதிய 51 சிறுகதைகள் பின்னர் ‘அம்பாரம்’ என்ற தொகுப்பாக 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. தமிழ் சிறுகதை இலக்கியத்திலும் பூமணி தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார்.
பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகப் பார்க்கப்படுகிறது. பல தசாப்தங்களாக தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அவர் வழங்கிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் என இலக்கிய ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
