இந்திய திரையிசை உலகின் தலைசிறந்த பின்னணி பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, உடல்நலக்குறைவு காரணமாக தனது 88-வது வயதில் காலமானார். பல்வேறு இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த அவர் உயிரிழந்தது திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லேபட்லா கிராமத்தில் பிறந்த எஸ். ஜானகி, மிக இளம் வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். மூன்று வயதிலேயே பாடத் தொடங்கிய அவர், பின்னர் இந்திய திரையிசை வரலாற்றில் மிக முக்கியமான பின்னணி பாடகிகளில் ஒருவராக உயர்ந்தார்.
தனது நீண்டகால இசைப் பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொத்தம் 17 மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி அபார சாதனை படைத்துள்ளார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரின் இசையில் ஏராளமான மறக்க முடியாத பாடல்களை வழங்கியுள்ளார்.
1959 ஆம் ஆண்டு ராம்பிரசாத் என்பவரை திருமணம் செய்துகொண்ட எஸ். ஜானகிக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே மகன் இருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் முரளி கிருஷ்ணா உயிரிழந்தது குடும்பத்திற்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
அந்த துயரத்திலிருந்து குடும்பம் முழுமையாக மீளாத நிலையில், சில மாதங்களிலேயே எஸ். ஜானகியும் காலமானது அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
