உத்தர பிரதேச மாநிலத்தில் தனது பெண் தோழியைப் பார்ப்பதற்காகச் சென்ற 19 வயது இளைஞர், மர்ம நபர்களால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கவுஷம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷிவ் பிரசாத் (19). இந்த வாலிபர் நேற்று மாலை, தன் வீட்டின் அருகில் உள்ள மகுவா கதா என்ற கிராமத்தில் வசிக்கும் தனது பெண் தோழி ஒருவரைச் சந்திப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தான் இரவு 7 மணியளவில் வீட்டிற்குத் திரும்பி விடுவதாகவும் தனது தாயிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தைக் கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், இரவு நேரத்தில் ஷிவ் பிரசாத்தின் செல்போனில் இருந்து அவரது தாய்க்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. பதற்றத்துடன் போனை எடுத்த தாயிடம், “அம்மா, என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள், என்னை சில பேர் கொலை செய்யப் பார்க்கிறார்கள்” என்று ஷிவ் பிரசாத் அலறியுள்ளார்.
பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஷிவ் பிரசாத்தை அங்கிருந்தவர்கள் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஷிவ் பிரசாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
“பெண் தோழியின் குடும்பத்தினரே என் மகனைத் திட்டமிட்டு அடித்துக் கொலை செய்துள்ளனர்” என்று அவரின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
