ரயில் பயணிகள், ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதை எளிமையாகவும், விரைவாகவும் வழங்குவதற்காக இந்திய ரெயில்வே தனது ஐஆர்சிடிசி இணையதளத்தின் புதிய ‘பீட்டா’ பதிப்பை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கடந்த மாதம் ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளம் ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று (ஜூலை 10, 2026) ஐஆர்சிடிசி மற்றும் CRIS அதிகாரிகள் MNIT மாணவர்களைச் சந்தித்து இந்த புதிய இணையதளத்தின் பீட்டா பதிப்பை செயல்விளக்கம் செய்து காட்டி, அவர்களின் கருத்துக்களைப் பெற்றுள்ளனர்.
டிக்கெட் முன்பதிவை எளிதாக்கும் முக்கிய மாற்றங்கள்
ரெயில்வே நிர்வாகத்தின் தகவல்படி, பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும், இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்கவும் புதிய பீட்டா பதிப்பில் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன:
தேவையற்ற கேப்ட்சாக்கள் (Captcha) நீக்கம்
டிக்கெட் புக் செய்யும் போது எரிச்சலூட்டும் தேவையற்ற கேப்ட்சா குறியீடுகள், பாப்-அப் விளம்பரங்கள் மற்றும் ஒளிரும் கிராபிக்ஸ் ஆகியவை புதிய தளத்தில் நீக்கப்பட்டுள்ளன. இதனால் இணையதளம் மிக வேகமாக செயல்படும்.
இருக்கை விவரங்கள்
ரயில்களில் உள்ள அனைத்து இருக்கை இருப்பு விபரங்களை பயணிகள் இனி ஒரே பார்வையில் தெளிவாகப் பார்த்துக் கொள்ள முடியும்.
மறுமுறை முன்பதிவு செய்வது எளிது
அடிக்கடி பயணிப்பவர்களின் விபரங்கள் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டு, அடுத்த முறை டிக்கெட் புக் செய்யும் போது மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டு கால முன்பதிவு அமைப்பில் மாற்றம்
இந்தியாவின் ஒட்டுமொத்த ரெயில் டிக்கெட் தேவையில் 88 சதவீதத்திற்கும் அதிகமானவை ஆன்லைன் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த முழு சிஸ்டத்தையும் அதிநவீன தொழில்நுட்பத்திற்கு மாற்ற ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஐஆர்சிடிசி தளம் இன்னும் சில மாதங்களில் முழுமையாகச் செயல்படும். புதிய ஐஆர்சிடிசி போர்டல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
