வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் விதிமுறைகளை மீறி, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் இருசக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சிலர், அரசு அனுமதித்த அளவை விட மிக அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஒலியெழுப்பிகளைப் பொருத்தி இயக்கி வந்தனர்.
இத்தகைய அதிக சத்தம் காரணமாகச் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள் நிலைதடுமாறுவதும், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாவதும் தொடர்கதையாக இருந்தது. மேலும், இந்த அதிகப்படியான ஒலி மாசுபாட்டால் பல இடங்களில் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துகள் நடப்பதாகக் காட்பாடி போக்குவரத்து போலீசாருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து, காட்பாடி போக்குவரத்து காவல்துறையினர் நகரின் முக்கியப் பகுதிகளில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காட்பாடி ரயில்வே நிலையம் எதிரே போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அவ்வழியாக விதிமுறைகளை மீறி இயக்கிய இரண்டு சக்கர வாகனங்கள் மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மடக்கி பிடித்து அவர்கள் மீது மோட்டார் வாகனம் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
