பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளின் மருத்துவச் சேவைகளை மிக எளிமையாகவும், விரைவாகவும் பெறும் வகையில், வாட்ஸ்ஆப் மூலமாகப் புறநோயாளிகள் பிரிவு (OP) சேவைக்கு முன்பதிவு செய்யும் புதிய வசதியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று தொடங்கி வைத்துள்ளார். மக்களுக்கு அதிநவீன மருத்துவச் சேவைகளை டிஜிட்டல் வழியில் கொண்டு சேர்க்கும் நோக்கில், “நலம்AI” என்ற பெயரில் வாட்ஸ்ஆப் சாட்பாட் சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தொடக்கம்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது இதய நோய் சிகிச்சைக்கான புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் இந்த வாட்ஸ்ஆப் முன்பதிவு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் சேவை, வரும் நாட்களில் படிப்படியாக மருத்துவமனையின் மற்ற அனைத்துத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள 22 மாவட்டங்களில், குறிப்பிட்ட சில மருத்துவப் பிரிவுகளிலும் இந்த வாட்ஸ்ஆப் முன்பதிவு சேவை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

“நலம்AI” சாட்பாட்டில் முன்பதிவு செய்வது எப்படி?
பொதுமக்கள் தங்களது மொபைலில் 96192 22999 என்ற அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் எண்ணைச் சேமித்துக் கொள்ள வேண்டும்.
அந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் செயலியில் ‘hi’ என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
உடனடியாக சாட்பாட் கேட்கும் நோயாளியின் பெயர், வயது, மருத்துவப் பிரிவு உள்ளிட்ட விவரங்களைப் பதிலளித்தால் போதும், மருத்துவச் சேவைக்கான டோக்கன் முன்பதிவு செய்யப்பட்டுவிடும்.
கூடுதல் வசதிகள்
இந்த “நலம்AI” சாட்பாட் மூலமாக முன்பதிவு செய்வது மட்டுமின்றி, நோயாளிகள் தங்களின் மருந்துச் சீட்டு மற்றும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளையும் நேரடியாக வாட்ஸ்ஆப்பிலேயே PDF வடிவில் பெற்றுக் கொள்ளலாம்.
