சென்னை மணலி புதுநகர் பகுதியில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர்கள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னை மணலி புதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி ஒன்று அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு காலி மைதானத்தில், நேற்று அதிகாலை வாலிபர்கள் சிலர் கையில் பட்டாக்கத்திகளுடன் சுற்றித்திரிந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள், உடனடியாக மணலி புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரோந்து வாகனத்தில் வந்துள்ளனர். போலீஸ் வருவதை பார்த்த அந்த கும்பல் சிதறி ஓடமுயன்றனர். உடனே போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். பின்னர், 8 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
லாரன்ஸ் (23), ரதீஷ் (24), சந்தோஷ் (21), கிருஷ்ணன் பிரசாத் (22), சசிகுமார் (20), சஞ்சய் (23), விக்னேஷ் (24) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கும்பலிடமிருந்து 8 கொடூரமான பட்டாக்கத்திகள் மற்றும் அரிவாள்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, லாரன்ஸ், ரதீஷ் உள்ளிட்ட 7 வாலிபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை சென்னை அரசு சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.
