கலப்பட தேயிலை தயாரித்த ஆலைக்கு சீல்: 760 கிலோவுக்கும் மேற்பட்ட தேயிலை பறிமுதல்

உத்தரப் பிரதேசத்தில் கலப்பட தேயிலை தயாரித்து பல மாவட்டங்களுக்கு விநியோகம் செய்த ஆலையை அதிகாரிகள் கண்டுபிடித்து சீல் வைத்துள்ளனர். இந்த சோதனையில் 760 கிலோவுக்கும் அதிகமான கலப்பட தேயிலை, ரசாயனப் பொருட்கள் மற்றும் போலி பிராண்ட் பெயர்களில் பயன்படுத்தப்பட்ட பேக்கிங் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பரபங்கி மாவட்டத்தில் உள்ள ஷாஹ்பூர் கிராமத்தில் அனுமதியின்றி தேயிலை தயாரிப்பு நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில சிறப்பு அதிரடிப்படை மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணைந்து சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க : காங்கோவில் எபோலா சிகிச்சைக்கான புதிய மருத்துவ பரிசோதனை தொடக்கம்

ஏராளமான கலப்பட பொருட்கள் பறிமுதல்

சோதனையின் போது 763 கிலோவுக்கும் அதிகமான கலப்பட தேயிலை, தேயிலையின் நிறத்தை மாற்ற பயன்படுத்தப்பட்ட ரசாயன கலவை, பேக்கிங் இயந்திரம் மற்றும் பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயர்கள் அச்சிடப்பட்ட காலி பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட தேயிலையின் சந்தை மதிப்பு சுமார் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.6 லட்சம் வரை இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் கைது

இந்த வழக்கில் முகமது ஷகீல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த சட்டவிரோத தொழிலை நடத்தி வந்ததாக அவர் விசாரணையில் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கலப்பட தேயிலை விநியோக வலையமைப்பில் தொடர்புடைய மற்ற நபர்களை கண்டறியும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தேயிலை மற்றும் ரசாயன மாதிரிகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related Post

Latest News