உத்தர பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள கோக்ராஜ் சுங்கச்சாவடியில் கடந்த ஜூன் 26-ஆம் தேதி எல்.பி.ஜி. (LPG) சமையல் எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று சுங்கச்சாவடியை நோக்கி வந்தது. சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக லாரியை நிறுத்த முயன்றபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் டேங்கர் லாரியிலிருந்து கேஸ் கசியத் தொடங்கி, சில நொடிகளிலேயே சுங்கச்சாவடி முழுவதும் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த அன்றைய தினமே டேங்கர் லாரியின் ஓட்டுநரும், சுங்கச்சாவடி ஊழியர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற ஊழியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த ஜூலை 1-ஆம் தேதி மற்றொரு ஊழியர் உயிரிழந்தார். இந்நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ரேபரேலியைச் சேர்ந்த ஹிராமணி சிங் (29) மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ண பால் மவுர்யா (23) ஆகிய இரு ஊழியர்கள் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
