திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் தொடர்பான வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதற்கு திமுக கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறது.
ஆர்.எஸ்.பாரதி
ஆய்வுக்கு சென்ற சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதா? மு.க.ஸ்டாலின், உதயநிதியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவை கைது செய்வார்களா? ஒருவரை விமர்சித்து பேசியதற்காக கைது செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது சர்வாதிகாரத்தின் உச்சம். இதனை சட்டரீதியாக சந்திப்போம். அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம்
தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?. சினிமா ஆக்ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து – விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர் விஜய் என கூறியுள்ளார்.
திமுக எம்.பி கனிமொழி கண்டனம்
முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணனை தவெக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர், தனது தொகுதியில் ஆய்வுப் பணியில் இருக்கையில் அராஜகமான முறையில் அவரை கைது செய்திருக்கிறது, இந்த தவெக அரசு. இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் ஒருபோதும் தி.மு.க அடிபணியாது என கூறியுள்ளார்.
