திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், முதல்-அமைச்சர் விஜய் குறித்து பொதுக்கூட்டத்தில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் தொடர்பான வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அரசை விமர்சித்ததாக கூறப்படுகிறது. அந்த பேச்சில் பயன்படுத்தப்பட்ட சில வார்த்தைகள் அவதூறாகவும், மரியாதைக்குறைவாகவும் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, தவெக நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் வழங்க போதுமான காரணம் இல்லை எனக் கருதிய நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூருக்கு வந்திருந்த அனிதா ராதாகிருஷ்ணனை ஆத்தூர் போலீசார் கைது செய்தனர்.
