ஒவ்வொரு புதிய மாதத்தின் தொடக்கத்திலும் சாமானிய மக்களின் பாக்கெட்டைப் பாதிக்கும் பல்வேறு நிதியியல் மற்றும் சேவை சார்ந்த மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், ஜூலை முதல் (01-07-2026) முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கிய விதிகளில் அதிரடி மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் அதிரடி உயர்வு
வெளிநாடு செல்ல திட்டமிடுபவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்கள் இன்று முதல் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. இதுவரை ரூ.1,500 ஆக இருந்த சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம், தற்போது ரூ.2,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவசரத் தேவைகளுக்காக விண்ணப்பிக்கப்படும் தட்கல் முறைக்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆதார் பயனாளர்களுக்கு நற்செய்தி
ஆதார் கணக்குடன் தங்களுடைய மின்னஞ்சல் (E-mail) முகவரியை இணைக்க விரும்பும் பயனாளர்களிடம் இதுவரை ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இன்று முதல் வரும் டிசம்பர் 31, 2026 வரை இந்தச் சேவையை எவ்வித கட்டணமும் இன்றி, முற்றிலும் இலவசமாக ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் மற்றும் வாகனங்களின் விலை
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாகனங்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன. அதன்படி, வாகனங்களின் விலை 1.5 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை மாடல்களுக்கு ஏற்ப உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
