மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் செம்பூர் பகுதியில் 18 குழந்தைகளுடன் சென்றுகொண்டிருந்த பள்ளிப் பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்ததில், 11 வயது மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை செம்பூர் திலக் நகர் பகுதியில் உள்ள யுனிவர்சல் பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று, இன்று மதியம் வழக்கம்போல் மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. மதியம் சுமார் 2:50 மணியளவில் பேருந்து செம்பூர் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் திடீரென பேருந்தின் மீது சாய்ந்து விழுந்து நசுக்கியது.
இந்த விபத்தில், 11 வயது சிறுவன் உயிரிழந்தான். காயமடைந்த 5 மாணவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ‘ஜென் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு மாணவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
