கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விபத்தையடுத்து, தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சித் தலைமை சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குப் பணம் நேரடியாகச் செலுத்தப்பட்டது.
கரூர் செல்லும் விஜய்
வழக்கு விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வரும் வேளையில், ஜூலை இரண்டாவது வாரத்தில் முதலமைச்சர் விஜய் கரூருக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து அவர்களின் தற்போதைய நிலை குறித்துக் கேட்டறிய உள்ளார்.
