இந்து மதத்தில் மிகக் தொன்மையான காலம் தொட்டே பல சடங்குகளும், பாரம்பரிய பழக்கவழக்கங்களும் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால், நாம் அன்றாடம் செய்யும் பல சுப காரியங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணங்கள் பலருக்கும் தெரிவதில்லை.
அப்படி அனைத்து விசேஷங்களிலும் முதன்மையாக விளங்குவது தேங்காய் உடைக்கும் பழக்கம் ஆகும். புதிய தொழில் தொடங்குவது, புதுமனை புகுவிழா, திருமணம், வண்டி வாகனங்கள் வாங்குவது என எந்தவொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு முன்பும் நாம் ஏன் தேங்காய் உடைக்கிறோம்? அதன் ஆன்மீகப் பின்னணி என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கோவில்களில் தேங்காய் உடைப்பது ஏன்?
இந்து வழிபாட்டு முறையில், முழுமுதற் கடவுளும், தடைகளை நீக்குபவருமான விநாயகப் பெருமானுக்கு ‘சிதறு தேங்காய்’ போடுவது மிக முக்கியமான சடங்காகும். எந்தவொரு காரியத்தைத் தொடங்கும் முன்பும் தேங்காயை உடைப்பதன் மூலம், நம்மைச் சுற்றியுள்ள தீய சக்திகளும், எதிர்மறை ஆற்றல்களும் விலகி ஓடும் என்பது நம்பிக்கை.
தேங்காயின் வெளிப்புறத்தில் உள்ள கடினமான ஓடு, மனிதனின் பேராசை, கவம், மற்றும் ‘நான்’ என்ற அகந்தையைக் குறிக்கிறது. இறைவனுக்கு முன்பாக தேங்காயைச் சிதற உடைப்பதன் மூலம், நம்மிடம் உள்ள ஆணவத்தை உடைத்து, இறைவனின் பாதங்களில் நம்மை முழுமையாக ஒப்படைக்கிறோம் என்பதை இது உணர்த்துகிறது.
தேங்காய் உடையும் போது அதிலிருந்து வெளியேறும் நீர், ஒரு மனிதனின் மனதில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் தீய எண்ணங்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. தேங்காய் நீர் வெளியேறுவது போல, நம் மனதின் எதிர்மறை எண்ணங்களும், அழுக்குகளும் நீங்கி, ஆன்மா தூய்மையாவதை இது குறிக்கிறது.
தேங்காய் அழுகியிருந்தால் ஆபத்தா?
நாம் சாமிக்கு அல்லது சுப காரியங்களுக்குத் தேங்காய் உடைக்கும் போது, சில நேரங்களில் தேங்காய் அழுகி இருப்பதுண்டு. இதனால் பலரும் தங்களுக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்று பயந்து, மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஆனால், அதற்கு அவசியமே இல்லை.
தேங்காய் அழுகியிருந்தால், நாம் நினைத்த காரியங்கள் தற்காலிகமாகச் சற்று தள்ளிப்போகுமே தவிர, வேறு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. உண்மையில், தேங்காய் அழுகி இருந்தால் நம் மீது இருந்த கடுமையான கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகள் விலகிவிட்டன என்பதே அதன் பொருளாகும். எனவே, அழுகிய தேங்காயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.
