சென்னையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய்

போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தீவிரப்படுத்தும் நோக்கில், சென்னையில் இன்று அதிகாலை பிரம்மாண்ட விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த ஓட்டப்பந்தயத்தில் தமிழக முதல்வர் விஜய் நேரடியாகப் பங்கேற்று ஓடினார்.

சென்னை காமராஜர் சாலையில் விழிப்புணர்வு ஓட்டம்

இளைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ’ஸ்டார்ட் ரன்… ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற பெயரில் இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்வை, முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ராமன் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலரும் இந்த ஓட்டத்தில் கலந்துகொண்டனர். விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Related Post

Latest News