உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுபோதையில் ஒருவர், உயர் அழுத்த 11,000 வோல்ட் மின் கம்பத்தின் மேல் ஏறி மின்கம்பிகள் மீது படுத்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் மின்சாரம் இல்லாததால் அவர் உயிர் தப்பினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பர்சா குர்த் கிராமத்தைச் சேர்ந்த தீன் தயாள் என்ற நபர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை உச்சகட்ட போதையில் இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த இருந்த 11,000 வோல்ட் உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது மளமளவென ஏறியுள்ளார்.
அங்கிருந்த மின் கம்பிகளுக்கு நடுவே சர்வ சாதாரணமாக அவர் படுத்துக் கொண்டதைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து அலறினர். இந்தத் தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடினர்.
அப்போது மின்சாரம் இல்லாததால் அவர் உயிர் தப்பினர். இருப்பினும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். இதையடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரை பத்திரமாக மீட்டனர்.
