கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பேரூராட்சிப் பகுதியில் தெரு நாய்கள் மூலம் நோய்கள் பரவுவதைத் தடுக்க சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, முதலில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த கணக்கெடுப்பில் முதற்கட்டமாக 46 தெரு நாய்கள் அடையாளம் காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து, மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அந்த நாய்கள் அனைத்திற்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
மங்கலம்பேட்டை பேரூராட்சியும் கால்நடை மருத்துவத் துறையும் இணைந்து இந்த பணியை மேற்கொண்டன. பேரூராட்சி நிர்வாகத்தின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை நிறைவேற்றினர்.
தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதோடு, பொதுமக்களின் உடல்நல பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
