தமிழ்நாட்டின் சட்டப்பேரவை செயல்படும் இடம் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. தற்போது சென்னை கோட்டைப் பகுதியில் இயங்கி வரும் சட்டப்பேரவையை, முட்டுக்காட்டில் உருவாகி வரும் பிரம்மாண்ட மாநாட்டு வளாகத்திற்கு மாற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சட்டப்பேரவைக்கு விரிவான மற்றும் நவீன வசதிகள் கொண்ட தனி வளாகம் தேவை என்ற கருத்து பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய மாநாட்டு மையம் கவனத்தை ஈர்த்துள்ளது.
நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் உருவாகும் இந்த வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் அமரக்கூடிய அளவிற்கு வசதிகளும் இடம்பெறுகின்றன. தற்போது, கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் புதிய இடம் அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் சட்டப்பேரவை அங்கு செயல்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
