தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி விமரிசையாகக் கொண்டாடினர்.
திருப்பத்தூர், மாவட்ட நகர பேருந்து நிலையத்தில், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சார்பாக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் விழா கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள், நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து ஊழியர்கள் கைகளில் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர். அப்போது ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த ரசிகர்கள் ‘தளபதி வாழ்க’ என முழக்கமிட்டு பேருந்து நிலையத்தையே அதிர வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தம் அருகே முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக (டிவிகே) தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்று கூடினர். அங்கு வந்திருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு தடபுடலாக அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக, பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கு நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த ஒரு பள்ளிச் சிறுமியை அழைத்து தவெக நிர்வாகிகள் கேக் வெட்ட வைத்தனர். அப்போது சுற்றியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி அந்தச் சிறுமியை உற்சாகப்படுத்தினர். இந்த விழாவில் ஏராளமான தவெக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
