தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தவெகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் காட்பாடி கிழக்கு பகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில், காட்பாடி – சித்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள நாராயணா திருமண மண்டபத்தில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காட்பாடி கிழக்கு பகுதி செயலாளர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏழை எளிய பொதுமக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக 200 தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
மேலும், அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் ஒரு பயனாளிக்கு தையல் இயந்திரமும், இளைஞர்களின் விளையாட்டை ஊக்குவிக்க விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இது தவிர, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500 ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவின் முத்தாய்ப்பாக, முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, வந்திருந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரம்மாண்டமான சமபந்தி கறி விருந்து வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவி முகாமில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
