“வாயை மூடுங்க.. உருப்படாதவங்களே!” – மேடையிலேயே தொண்டர்களை வெளுத்து வாங்கிய மல்லிகார்ஜுன கார்கே

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பி.கே.ஹரிபிரசாத் பொறுப்பேற்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார். அப்போது மேடையில் அவர் பேசத் தொடங்கியபோது, அங்கிருந்த தொண்டர்கள் சிலர் தற்போதைய கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக “டிகே.. டிகே..” எனத் தொடர்ந்து கோஷமிட்டு இடையூறு செய்தனர்.

இதனால் கடும் கோபமடைந்த மல்லிகார்ஜுன கார்கே, தொண்டர்களை நோக்கி, “வாயை மூடுங்கள்! அமைதியாக உட்காருங்கள். ஏதோ ஒட்டுமொத்த நாடும் உங்கள் கைக்குள் வந்துவிட்டது போல ஆடுகிறீர்கள். உருப்படாதவர்களே!” என மேடையிலேயே மிகக் காட்டமாக சாடினார். கார்கே கோபமடைந்ததைத் தொடர்ந்து, முதலமைச்சர் டி.கே.சிவகுமாரும் உடனடியாக எழுந்து நின்று, தொண்டர்களை அமைதியாக இருக்குமாறு கைகாட்டி சைகை செய்தார்.

தொடர்ந்து பேசிய கார்கே, “இது காங்கிரஸ் கட்சியின் கூட்டம். தனி நபர் ஒருவருக்கான கூட்டம் அல்ல. கட்சியை வலுப்படுத்தவும், ஒற்றுமைப்படுத்தவும் அனைவரும் கூடியிருக்கும் விழா இது. ஆளுக்கு ஒரு பெயரைச் சொல்லி இப்படி கத்திக்கொண்டிருந்தால், மீதமுள்ளவர்கள் என்ன இங்கே குப்பை கூட்டவா வந்திருக்கிறார்கள்?” என்று ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒழுக்கமின்மையை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என எச்சரித்த அவர், “அரசியலில் எனக்கு நீண்ட கால அனுபவம் உள்ளது. கட்சிதான் உங்கள் அடையாளத்திற்கான அடித்தளம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இங்கே கூச்சலிடுபவர்கள் யார் யார் என்பது வீடியோ பதிவுகளில் இருக்கும். அந்த காட்சிகளை ஆய்வு செய்து, ஒழுங்கீனமாக நடந்துகொண்டவர்கள் மீது நிச்சயம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்” என்றும் எச்சரித்தார்.

கர்நாடகாவில் கடந்த 2023 தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது முதலே சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் இடையே முதலமைச்சர் நாற்காலிக்கு கடும் போட்டி நிலவியது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் பதவி சுழற்சி முறையில் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தின்படி, சமீபத்தில் ஜூன் தொடக்கத்தில் டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், கட்சி விழாவில் ஏற்பட்ட இந்த மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News