இந்தியாவில் அதிவேக ரயில் போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மேலும் 7 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்த முக்கிய அறிவிப்பை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள புல்லட் ரயில் வழித்தடங்களில் சென்னை – பெங்களூரு, பெங்களூரு – ஐதராபாத், மும்பை – புனே, புனே – ஐதராபாத், டெல்லி – லக்னோ, டெல்லி – வாரணாசி மற்றும் டெல்லி – சிலிகுரி ஆகிய 7 முக்கிய வழித்தடங்கள் இடம் பெற்றுள்ளன.
தற்போது, சென்னை மற்றும் பெங்களூரு இடையே ரயிலில் பயணிக்க 5 மணி நேரத்திற்கும் மேலாகி வரும் நிலையில், புல்லட் ரயில் மூலம் வெறும் 73 நிமிடங்களில் (1 மணி நேரம் 13 நிமிடங்கள்) சென்றடைந்து விடலாம்.
சென்னை – பெங்களூரு புல்லட் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி, பரந்தூர் புதிய விமான நிலையம், சித்தூர், கோலார் வழியாக பெங்களூருவின் பையப்பனஹள்ளி மற்றும் ஒயிட்பீல்டு ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் அமைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை – அகமதாபாத் ரயில் பாதை பணிகள் மிக அதிவேகமாக நடந்து வரும் சூழலில், அது அடுத்த ஆண்டு (2027) பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய 7 வழித்தடங்களின் வருகை இந்தியாவின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பல மடங்கு வேகப்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
