கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 21) நாடு முழுவதும் நீட் மறுதேர்வு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தேர்வு மையங்களில் சுமார் 22.7 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.
இந்நிலையில், தேர்வு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே, டெலிகிராம் செயலியில் நீட் மறுதேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துவிட்டதாகக் கூறி ஒரு வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடி விளக்கம்:
இந்த விவகாரம் குறித்து தேசிய தேர்வு முகமை தனது எக்ஸ் (X) வலைதள பக்கத்தில் உடனடியாக விளக்கம் அளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த வீடியோ முற்றிலும் போலியானது என்றும், அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அப்பட்டமான பொய் என்றும் என்.டி.ஏ திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும், நாடு முழுவதும் நீட் மறுதேர்வு மிகவும் விரிவான பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்புடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்:
இதுபோன்ற தவறான மற்றும் போலியான தகவல்களை உள்நோக்கத்துடன் தயாரித்து பரப்புவது, மாணவர்களை ஏமாற்றுவது மிகத் தீவிரமான குற்றமாகும். எனவே, பெற்றோர்களும், மாணவர்களும் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்களில் வெளியாகும் தகவல்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
