தமிழகம் முழுவதும் 45 ஆர்டிஓ அலுவலகங்களில் அதிரடி ரெய்டு… புரோக்கர்கள் அலறியடித்து ஓட்டம்!

தமிழகம் முழுவதும் உள்ள 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனை தகவல் வெளியானதும் பல இடங்களில் புரோக்கர்கள் தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சில அலுவலகங்களில் முறைகேடுகள் மற்றும் லஞ்சப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து, கோவை காந்திபுரம், திருப்பூர் தெற்கு, தென்காசி, நாகர்கோவில், திருநெல்வேலி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, கரூர், கும்பகோணம், திருச்சி, செஞ்சி, சேலம் கந்தம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, மதுரை வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது பல இடங்களில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனை, போக்குவரத்து துறையில் நடைபெறும் முறைகேடுகள் மீது அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. சோதனையின் முழுமையான விவரங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

Latest News