டாடா TCS-க்கு ரூ.1800 கோடி மேல் இழப்பு – முதலீட்டாளர்கள் கவலை!

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அமெரிக்காவில் நடந்த முக்கிய வழக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டை நிராகரித்ததையடுத்து, நிறுவனம் கூடுதலாக 70 மில்லியன் டாலர் (சுமார் ரூ.600 கோடிக்கு மேல்) இழப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்குக்காக 150 மில்லியன் டாலர் தொகையை ஒதுக்கியிருந்த TCS, தற்போது மேலும் 70 மில்லியன் டாலரை அபராதம், வட்டி மற்றும் சட்ட செலவுகளுக்காக பதிவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் இந்த வழக்கில் நிறுவனத்தின் மொத்த நிதிச்சுமை 220 மில்லியன் டாலரை கடந்துள்ளது.

இந்த வழக்கு, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் DXC டெக்னாலஜி சார்பில் தொடரப்பட்டது. கடந்த ஜூன் 15ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய 168 மில்லியன் டாலர் இழப்பீட்டு உத்தரவை அப்படியே அமலில் வைத்தது.

இந்த பிரச்சனை 2019ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது DXC நிறுவனத்தின் முன்னாள் அமைப்பான Computer Sciences Corporation, TCS மீது டெக்சாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில், காப்பீட்டு நிறுவனமான Transamerica-வில் பணியாற்றிய சுமார் 2,200 ஊழியர்களை TCS தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டு, அவர்களின் உள்துறை தகவல்களை பயன்படுத்தி போட்டி தயாரிப்பை உருவாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டு ஜூரி குழு, TCS நிறுவனம் வர்த்தக ரகசியங்களை திட்டமிட்டு திருடியதாக கூறி 210 மில்லியன் டாலர் அபராதம் விதிக்க பரிந்துரை செய்தது. பின்னர் நீதிபதி அந்த தொகையை 168 மில்லியன் டாலராக குறைத்தார். இதை மேல்முறையீட்டு நீதிமன்றமும் 2025ஆம் ஆண்டு உறுதி செய்தது.

இதற்கு எதிராக TCS, “DXC நிறுவனம் உண்மையான நஷ்டத்தை நிரூபிக்கவில்லை. எனவே இவ்வளவு பெரிய இழப்பீடு வழங்கக்கூடாது” என அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. ஆனால் அந்த மனு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், TCS நிறுவனத்தின் கடந்த காலாண்டு நிகர லாபம் 137.18 பில்லியன் ரூபாயாக இருந்தது. ஆனால் இந்த புதிய நிதிச்சுமை முதலீட்டாளர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

Latest News