சீனாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. வடமேற்கு சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 5.06 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் கிங்ஹாய் மாகாணத்தின் உயரமான மலைப்பகுதியான ஹைசி பகுதியில் மையம் கொண்டிருந்ததாகவும், பூமியின் அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதிர்வு பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே அப்பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சேத விவரங்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
சீன அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்த முக்கிய நிலநடுக்கத்திற்கு பிறகு பல முறை பிந்தைய அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. அதில் ஒன்று 4.9 ரிக்டர் அளவுக்கு பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
