திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் மருந்தகம் ஒன்றில் பணியாற்றிய பெண் ஊழியரிடம் செல்போன் கேட்டு வாங்கிய மர்ம நபர், அதை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
வாணியம்பாடி கச்சேரி சாலையில் மோகன்குமார் என்பவர் மருந்தகம் நடத்தி வருகிறார். சம்பவம் நடந்தபோது அவர் பணிநிமித்தமாக வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மருந்தகத்தில் பெண் ஊழியர்கள் மட்டும் பணியில் இருந்தனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர், மருந்து வாங்க வந்த வாடிக்கையாளர் போல் மருந்தகத்திற்குள் நுழைந்துள்ளார். பின்னர் அருகிலுள்ள மருத்துவமனையில் தனது உறவினர் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு அவசரமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி பெண் ஊழியரிடம் செல்போன் கேட்டுள்ளார்.
அவரது பேச்சை நம்பிய பெண் ஊழியர் தனது செல்போனை கொடுத்துள்ளார். செல்போனில் பேசுவது போல சில நிமிடங்கள் நடித்த அந்த நபர், ஊழியர் மற்ற வாடிக்கையாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தை பயன்படுத்தி, செல்போனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து மருந்தக உரிமையாளர் மோகன்குமார், வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், நூதன முறையில் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை அடையாளம் கண்டு பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
