பெண்களிடம் தகராறு., மதுபோதையில் வாலிபர் அட்டகாசம்..போலீசில் ஒப்படைத்த மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொடையாஞ்சி கிராமத்தில், மதுபோதையில் இருசக்கர வாகனம் ஓட்டிய வாலிபர் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம் தகராறு செய்து, பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரைச் சேர்ந்த நாகராஜ் (38) என்பவர் நேற்று மதுபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் கொடையாஞ்சி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்கள் அருகே, அவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார்.

மேலும், பெண்கள் வேலை செய்து கொண்டிருந்த பகுதியை பலமுறை சுற்றி வந்து, அவர்கள் மீது மோதுவது போன்ற வகையில் வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பெண்கள், அவரை நிறுத்தி ஏன் இவ்வாறு ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆத்திரமடைந்த நாகராஜ் பெண்களிடம் அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. நிலைமை மேலும் பதற்றமடைந்த நிலையில், அங்கிருந்த தேங்காய் மட்டைகளை எடுத்து ஒருவரையொருவர் தாக்க முயன்ற சம்பவமும் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை பெண்கள் மீது ஊற்றி தீ வைத்துவிட முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

சம்பவத்தை பார்த்த கிராம மக்கள் உடனடியாக தலையிட்டு நாகராஜை பிடித்து வைத்ததுடன், ஊராட்சி மன்ற தலைவர் பாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.பின்னர், அவர்மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

Latest News