ஜூன் 30 முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளா? – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ‘ஜூன் 30 முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமாகும்’ என்ற தகவல் குறித்து மத்திய அரசு முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

காகித ரூபாய் நோட்டுகள் விரைவில் கிழிந்து சேதமடைவதால், அவற்றுக்கு மாற்றாக அதிக ஆயுட்காலம் கொண்ட பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும், இந்த புதிய நோட்டுகள் வருகிற ஜூன் 30-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டது.

இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) இதுகுறித்து விளக்கம் வெளியிட்டுள்ளது.

அதில், பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எந்தத் திட்டமும் தற்போது ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், அதனை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல செல்லுபடியாகும் என்றும், அவற்றை மாற்றுவது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் குறித்த சமூக வலைத்தள தகவல்களை உண்மை என கருதாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே மக்கள் நம்ப வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

Related Post

Latest News