உயிரை காப்பாற்றிய இன்ஸ்டாகிராம்! – இளைஞரின் தற்கொலையை முறியடித்த மெட்டா

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 7 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் மனஅழுத்தம் மற்றும் தற்கொலை எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுடன் “Be happy in your life” என்ற வாசகத்தையும் அவர் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை கண்டறிந்த மெட்டா நிறுவனத்தின் AI பாதுகாப்பு அமைப்பு உடனடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பின்னர் அந்த தகவல் உத்தரப் பிரதேச மாநில காவல் துறையின் சமூக வலைதள கண்காணிப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப உதவியுடன் மொபைல் எண் மற்றும் IP முகவரி அடிப்படையில் இளைஞரின் இருப்பிடம் கண்டறியப்பட்டு, காவல்துறையினர் விரைந்து அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த இளைஞர் காதல் தோல்வியால் கடந்த சில வாரங்களாக மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் தற்கொலை தொடர்பான பதிவுகளை AI மூலம் கண்டறிந்து உடனடி நடவடிக்கை எடுக்கும் மெட்டாவின் பாதுகாப்பு அமைப்பு ஒரு உயிரைக் காப்பாற்றியதாக இந்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது.

Related Post

Latest News