இனி முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசனம்? – அறநிலையத்துறை தீவிர ஆலோசனை

தமிழ்நாட்டில் உள்ள முக்கிய கோயில்களில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசல் மற்றும் பக்தர்களை ஏமாற்றும் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், முன்பதிவு நடைமுறையை கட்டாயமாக்க அறநிலையத்துறை ஆலோசித்து வருகிறது.

சமீபத்தில் திருவண்ணாமலையில் வெளிமாநில பக்தர்களிடம் சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்து தருவதாக கூறி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயில் நிர்வாகத்தின் கண்காணிப்பால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற மோசடிகளை தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.

பக்தர்கள் முன்கூட்டியே பதிவு செய்தால் மட்டுமே தரிசனம் பெற முடியும் என்ற திட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தரிசன வரிசையை ஒழுங்குபடுத்தவும், தேவையற்ற இடைத்தரகர்களின் தலையீட்டை தவிர்க்கவும் முடியும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

மேலும், பக்தர்களின் வருகை எண்ணிக்கையை துல்லியமாக கண்காணித்து, கோயில்களில் பாதுகாப்பு மற்றும் நிர்வாக வசதிகளை மேம்படுத்தவும் இந்த நடைமுறை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் தொடர்பாக இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு, விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

Latest News