மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சலீம் குமார் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார்.
கல்லீரல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் நேற்று கொச்சியிலுள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
யார் இந்த சலீம் குமார்?
கேரள மாநிலத்தின் பரவூரில் பிறந்த சலீம் குமார், தனது கலைப் பயணத்தை மிமிக்ரி கலைஞராகத் தொடங்கினார். பின்னர் 1997-ஆம் ஆண்டு வெளியான ‘இஷ்டமானு நூறு வட்டம்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மலையாள சினிமாவில் தனித்துவமான இடத்தைப் பெற்றார். தனது இயல்பான நடிப்பு மற்றும் நகைச்சுவை திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
2010-ஆம் ஆண்டு வெளியான ‘ஆதாமிண்டெ மகன் அபூ’ திரைப்படத்தில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பிற்காக தேசிய திரைப்பட விருதில் சிறந்த நடிகருக்கான விருதை சலீம் குமார் வென்றார். மேலும் பல முறை கேரள மாநில திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார்.
