கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும் காற்று மாசு: டெல்லி எய்ம்ஸ் அதிர்ச்சித் தகவல்

காற்ற மாசுபடு காரணமாக தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என டெல்லி எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

காற்று மாசுபடுவது கர்ப்பிணிப் பெண்களுக்கும், அவர்களின் கருவில் வளரும் குழந்தைகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். ஆனால், காற்றில் கலந்துள்ள ஆபத்தான நுண்ணிய துகள்கள் எந்தெந்த உயிரியல் வழிமுறைகளைச் சிதைத்து, குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.

கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டு சேர்க்கும் முக்கிய உறுப்பாக நஞ்சுக்கொடி செயல்படுகிறது. காற்றில் இருக்கும் மிக நுண்ணிய மாசுத் துகள்கள், இந்த நஞ்சுக்கொடியின் வழியாக உள்ளே நுழைவதாக இந்த ஆய்வு கூறுகிறது. இதனால், குழந்தைக்குச் செல்ல வேண்டிய ஊட்டச்சத்துக்கள் தடைபட்டு குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கிறது.

இதன் காரணமாக, குறைப்பிரசவம் ஏற்படுதல், பிறக்கும் போதே குழந்தையின் எடை குறைவாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்தியாவில் ஆண்டுதோறும் பிறக்கும் குழந்தைகளில் சுமார் பதினெட்டு சதவீதக் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பது ஒரு பெரும் சவாலாக உள்ளது.

எனவே, கர்ப்பிணிப் பெண்கள் காற்று மாசின் பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Post

Latest News