பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் இன்று அதிகாலை சுமார் நான்கு மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பதினைந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். எனினும், இந்த விபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கிருஷ்ண நந்தன் பிரசாத் சிங், கீதா தேவி, உதய் குமார் மற்றும் சஷாங்க் ஆகிய நான்கு நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பீகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
