விமான நிலைய உணவக மேஜையில் சாப்பிட்ட தெரு நாய் – பயணிகள் அதிர்ச்சி

ஐதராபாத் சர்வதேச விமான நிலைய உணவு மேஜையில் தெரு நாய் ஒன்று மிச்ச உணவைச் சாப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கடும் விமர்சனத்தை சந்தித்துள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் உணவு வளாகப் பகுதியில் (Food Court), தெரு நாய் ஒன்று பயணிகளின் இருக்கை மீது ஏறி, மேஜையில் இருந்த தட்டுகளில் உள்ள மிச்ச உணவுகளைச் சாப்பிடுகிறது. இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிராஜ் நூரானி என்ற பயணி இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்த்த பொதுமக்களும் பயணிகளும் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வந்து செல்லும் ஒரு முக்கியப் போக்குவரத்து மையத்தில், ஒரு விலங்கு எவ்வாறு உள்ளே நுழைந்தது என்ற பாதுகாப்புக் கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, ஐதராபாத் விமான நிலைய நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகப் பதிலளித்துள்ளது. அதில், தெரு நாய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்புள்ள நகராட்சி அமைப்பான ஜி.எச்.எம்.சி (GHMC) உடன் இணைந்து கடுமையான வனவிலங்கு மேலாண்மை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

விமான நிலைய வளாகத்திற்குள் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், 2026 ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 21 தெரு நாய்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் மறுபடி நடக்காமல் இருக்க பணியாளர்களை தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Related Post

Latest News