பஞ்சாபி பாடகியான இந்தர் கவுர் ஆறு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட நிலையில் தற்போது சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
29 வயதான இந்தர் கவுர், கடந்த மே 13ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, லூதியானா அருகே உள்ள நீலோ கால்வாயில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், சுக்விந்தர் சிங் என்ற நபருடன் இந்தர் கவுருக்கு சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்ததால், இந்தர் கவுர் அவருடன் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுக்விந்தர் சிங் பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மேலும், குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் கனடாவில் இருந்து நேபாளம் வழியாக இந்தியா வந்து இந்தக் கொலையை திட்டமிட்டு செய்துவிட்டு மீண்டும் அதே வழியாக தப்பியிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கில் போலீசார் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, தப்பியோடியவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.
