தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தவும், சட்டைப் பையில் வைத்திருக்கவும் தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியில் இருக்கும் நேரத்தில் கைப்பேசி பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்த சூழலில் தற்போது கடுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, பேருந்து ஓட்டும் நேரத்தில் ஓட்டுநர்கள் கைப்பேசியை பயன்படுத்துவதும், சட்டைப் பையில் வைத்திருப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுகுறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், பலர் விதிகளை மீறுவதாக புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
பயணத்தின் போது ஓட்டுநர்கள் கைப்பேசி பயன்படுத்துவதால் கவனச்சிதறல் ஏற்பட்டு, சில இடங்களில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளும் நடந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் பாதுகாப்பு விதிகளை மேலும் கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், பேருந்து நிலையங்கள் மற்றும் வழித்தடங்களில் நடத்தப்படும் திடீர் ஆய்வுகளில் ஓட்டுநர்கள் கைப்பேசி வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கப் பேருந்து நிலையங்களிலும், பேருந்து வழித்தடங்களிலும் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
