ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி தீபக் சிங்க்லா மற்றும் கட்சி தொண்டர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வங்கி மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மற்றும் கோவா மாநிலங்களில் பல இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வட கோவாவில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பு குழுவைச் சேர்ந்த சிலர் தங்கியிருந்த அடுக்குமாடி இல்லத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் டெல்லி முதலமைச்சரும், கோவா மாநில ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளருமான அதிஷி சிங் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கோவாவில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், பாஜக ஆதரவுடன் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது. இது தொண்டர்களை அச்சுறுத்துவதற்கும், கட்சியின் அமைப்பு தொடர்பான தகவல்களை கைப்பற்றுவதற்குமான முயற்சியாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபக் சிங்க்லா கடந்த 2020 மற்றும் 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் விஷ்வாஸ் நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டும் வங்கி மோசடி தொடர்பாக அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது.
