நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை பனையூரில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை திடீர் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதான கார்த்திகேயன் என்ற இளைஞர், படப்பிடிப்பு தளத்தில் மின்சார பணிகளில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
இதையடுத்து, உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
