முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாமல் இறுதியில் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு மரபு மீறப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பல ஆண்டுகளாக தமிழக அரசு நிகழ்ச்சிகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தமிழ்த்தாய் வாழ்த்து மரபு மாற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : போலிசின் கையை கடித்த வாலிபர் : கைது செய்ய முயன்ற போது வெறிச்செயல்
பொதுவாக தமிழக அரசு விழாக்கள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குவது வழக்கம். அதன் பின்னரே மற்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். இது வெறும் நிகழ்ச்சி நடைமுறை மட்டுமல்ல; தமிழின் மரியாதையையும், மாநில அடையாளத்தையும் வெளிப்படுத்தும் பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதலமைச்சராக விஜய் பதவியேற்ற விழாவில் இந்த வரிசை முற்றிலும் மாறியிருந்தது. விழா தொடக்கத்தில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டதாகவும், அதன்பின் தேசிய கீதம் இடம்பெற்றதாகவும், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுவே சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரிய விவாதத்தை உருவாக்கியது.
